கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 31-ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழையும், டிச.31-ம்தேதி தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவடட்ங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் பெய்த கனமழை புரட்டிப்போட்டது. இதே போல கடந்த 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பேரழிவைக் கொண்டு வந்தது.
இதில் தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட மக்களில் பல இடங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை.
ஆனாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட இழப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் டிச. 31-ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் 31-ம் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கனமழையால் பாதிப்பில் இருந்து தென்மாவட்ட மக்கள் மீளாத நிலையில் வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு அச்சமூட்டியுள்ளது.