ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி ஏப்ரல் 22-ம் தேதி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், 'தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பிடிபட்டது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை இன்று விசாரிப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இருதரப்புவாதங்களை கேட்ட நீதிமன்றம், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!
முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?
தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!
பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு