கழிவு நீர் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுமா மதுரை மாநகராட்சி?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு கழிவு நீரை வடிகட்டி அனுப்பும் ‘டயாபிராம் சேம்பர்’ அமைப்பு கட்டமாயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி ஆரம்பத்தில் 72 வார்டுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதன்பின் 2011ம் ஆண்டு புறநகர் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 1971ம் ஆண்டு நகராட்சியாக மதுரை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

கடந்த 1924 மற்றும் 1959ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பிரிட்டிஷார் ஆட்சியில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைப்பு முதன் முதலில் நிறுவப்பட்டது. அதன்பிறகு இந்த பாதாள சாக்கடை அமைப்பு, 1983ம் ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மாநகராட்சி 100 வார்டுகளில் 1.50 லட்சம் பதாள சாக்கடை இணைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது புதிதாக ஒரு லட்சம் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

வைகை வடகரை 13 வார்டுகளில் ரூ.293.37 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கிறது. நகர்பகுதியில் மேலும், ரூ.460 கோடியில் புதிதாக பாதாளசாக்கடை அமைப்பு ஏற்படுத்த மாநகராட்சி ‘டெண்டர்’ விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது மாநகராட்சியில் போடப்பட்ட பழைய பாதாள சாக்கடை அமைப்புகள் சிதலமடைந்து கழிவு நீர் சாலைகள், தெருக்களில், பொங்கி வெளியேறுகிறது. மண் அகற்றும் வாகனங்கள், (Desilting Auto), கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்களை (Sucking lorry, super sucker machine) கொண்டு அடைப்புகளை சரி செய்தும், கழிவு நீரை உறிஞ்சியும் பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்து தற்காலிக தீர்வு காணப்படுகிறது.

ஆனாலும், வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்களில் உள்ள பாதாள சாக்கடைகளில் பொதுமக்கள், ஊழியர்கள் மறுபடியும் விழிப்புணர்வு இல்லாமல் பிளாஸ்டிக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள், மண் போன்ற அடைப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்களை கழிவு நீர் கால்வாய்களில் போட்டுவிடுகின்றனர்.

அந்த பொருட்கள் பொதுவிநியோக மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய்களில் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுபோல், சில இடங்களில் மண்ணும் அடைத்தும் கழிவுநீர் தொடர்ந்து செல்ல முடியாமல் தேங்கி பாதாளசாக்கடை தொட்டிகள் வழியாக சாலைகளில் பொங்கி வெளியேறுகிறது. மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், ஊழியர்கள் எவ்வளவோ விழிப்புணர்வு செய்தும், மக்கள் தொடர்ந்து கழிவுப் பொருட்களை வீடு தேடி வரும் தூய்மைப்பணியாளர்களிடம் வழங்காமல் கழிவு நீர்குழாய்கள், சமையல் அறை குழாய்களில் போட்டுவிடுகின்றனர்.

அதனால், பாதாள சாக்கடை பிரச்சனைக்கு மாநகராட்சி நிரந்தர தீர்வு காண முடியவில்லை. தற்போது மாநகராட்சியில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு முழுவதும் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகளில் உள்ள கழிவு நீர் குழாய்களில் போடப்படும் கழிவுப்பொருட்கள், மாநகராட்சி பாதாளசாக்கடை குழாய்களில் வராமல் தடுக்க, பாதாளசாக்கடை இணைப்பு பெற்ற ஒவ்வொரு கட்டிடத்திற்கும் கழிவு நீரை வடிகட்டும் ‘டயாபிராம் சேம்பர்’ (diaphragm chamber) கட்டாயமாக்கினால் பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் எனவும், புதிய பாதாள சாக்கடை அமைப்பதால் மட்டுமே கழிவு நீர் அடைப்பு தீர்வு கண்டுவிட முடியாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகராட்சி கணக்கெடுப்பில் வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்களில் 80 சதவீதம் ‘டயாபிராம் சேம்பர்’ இல்லாததால் கழிவுநீர் அடைப்பு ஏற்படுகிறது. ஒரே வளாகத்தில் 6-க்கும் மேற்பட்ட வீடுகள், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும். அதுபோல், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களிலும் பாதாளசாக்கடை இணைப்புகள் உள்ளன.

ஒவ்வொரு கட்டிடத்திற்கு ‘டயாபிராம் சேம்பர்’ அமைத்தால் இந்த கட்டிடங்களில் இருந்து வரக்கூடிய கழிவு நீரை மட்டும் வடிக்கட்டி மாநகராட்சி பாதாளசாக்கடை குழாய்க்கு அனுப்புகிறது. மக்கள் போடும் பிளாஸ்டிக் கழிவுகள், மற்ற பொருட்களை, அது பில்டர் செய்து, பாதாளசாக்கடை குழாய்க்கு செல்லவிடாமல் தடுக்கும். கட்டிட உரிமையாளர்கள், ‘டயாபிராம் சேம்பர்’களை அடிக்கடி திறந்துப்பார்த்து அதில் வடிகட்டி தேக்கமடைந்து கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ளலாம்.

அதனால், கட்டிடத்தில், மாநகராட்சி பாதாளசாக்கடை குழாய் அமைப்புகளில் அடைப்பு ஏற்படாது. இந்த ‘டயாபிராம் சேம்பர்’ அமைப்பதற்கு பெரிய செலவு ஏற்படுவதில்லை. வீடு, கட்டிடங்களை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கட்டடிடத்திலும் ‘டயாபிராம் சேம்பர்’ அமைத்தால் மட்டுமே பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

மற்றபடி புதிய பாதாளசாக்கடை அமைத்தாலும், பழைய பாதாள சாக்கடை அமைப்புகளை தூர்வாரி மறுசீரமைப்பு செய்வதாலும் எந்த பயனும் இல்லை. மாநகராட்சி ஒவ்வொரு பாதாளசாக்கடை இணைப்புக்கு ‘டயாபிராம் சேம்பர்’ கட்டாயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்று தாங்களே தங்கள் கட்டிடத்தில் அமைக்க வேண்டும்’’ இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE