தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

By காமதேனு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை

இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை மறுதினம்(ஏப்ரல் 19) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகளை செய்துள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை

அதனை முன்னிட்டு அன்றைய தினம் உயர் நீதிமன்றம், திரையரங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிடு, தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழங்கள் சந்தையான சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுபவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் விதமாக நாளையும், நாளை மறு தினமும் விடுமுறை அளிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் சில்லறை விற்பனை கடைகளுக்கு தேவையான காய்கறிகளை இன்றே வாங்கிக் கொள்ளலாம் என்று சில்லறை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE