வாழ்க்கையை சுழற்றிப் போட்ட சுனாமி... கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மீனவர்கள்!

By காமதேனு

டிசம்பர் 26, சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை தமிழகத்தை சூறையாடியதன் 19-ம் ஆண்டு நினைவு தினம். அன்னை மடியாக திகழ்ந்த கடல் அன்று எமனாக மாறி மீனவர்களையும், கடற்கரை பகுதி மக்களையும் வாரி சுருட்டியதன் நினைவு தினம்.

19 ஆண்டுகள் கடந்தும், சுனாமி ஏற்படுத்திச் சென்ற வடு மக்களின் மனதில் இன்னும் மாறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி கடல் அன்னை வாரி சென்ற உயிர்களை தேடி கடற்கரைக்கு வந்து மலர் தூவி வழிபடுவது அந்த மக்களின் வழக்கமாகி விட்டிருக்கிறது. இறந்து போன தங்கள் உறவுகளை நினைத்து, கடற்கரையில் கூடி கண்ணீர் விட்டு கதறி அழுவது இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சுனாமியால் அதிகம் உயிரிழந்த கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் கடற்கரையோர கிராமங்கள் அனைத்திலும் இன்றையதினம் சோகம் சூழ்ந்ததாகவே இருக்கும். காலையில் எழுந்ததுமே ஒன்றுகூடி கடற்கரைக்குச் செல்பவர்கள், இழந்த தங்கள் சொந்தங்களை நினைத்து கண்ணீர் மல்குவார்கள்.

இன்றும் அதைப்போலவே கடற்கரையோர கிராமங்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், அனைத்து ஊர்களிலும் கடற்கரையில் கூடி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் மௌன ஊர்வலமாக சென்றும், கடற்கரையில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மீனவப் பெண்கள் கடற்கரை மணலில் அமர்ந்து தங்கள் மறைந்த சொந்தங்களை நினைத்து, ஒருவரையொருவர் கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டார்கள். வீட்டில் இருந்து கொண்டு வந்த பால், பூக்கள் ஆகியவற்றை கடலில் தூவி, கடலன்னையை சாந்தப்படுத்தவும், தங்கள் உறவுகளுக்கான சடங்குகளை செய்தும் முடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE