மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே கடலில் இருந்து மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சம் அடைந்து விலகிச் சென்றனர். மிதந்து வந்த அந்த மர்மப் பொருள் சிறிது நேரத்தில் அப்பகுதியில் கரை ஒதுங்கியது.
அது என்ன பொருள் என்பது குறித்து தெரியாத நிலையில் மீனவர்கள் உடனடியாக கடலோர காவல்குழும போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸார் கரை ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து விசாரணை நடத்தினர்.
அவர்களின் விசாரணையில் அந்தப் பொருள் கடலில் தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அடையாளப்படுத்துவதற்காக மிதக்க விடும் பொருள் என தெரியவந்துள்ளது. இதை போயா என அழைக்கின்றனர். இந்தப் பொருள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என பூம்புகார் கடலோர காவல் குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரையில் ஒதுங்கிய இந்த மர்மப் பொருள் குறித்த விவரம் பகுதியில் தீயாய் பரவியது. வித்தியாசமான உருவம் கொண்ட அந்த பொருளை அப்பகுதி பொதுமக்களும், பூம்புகாருக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளும் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதனால் தற்காலிக சுற்றுலா மையமாக கீழமூவர்கரை கிராமம் மாறியுள்ளது.