தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என லோக் போல் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் தேர்தலில் இறுதிக் கட்டப் பரபரப்பில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இந்தியா' கூட்டணியும், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சியுமாக களத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் எனவும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு சில இடங்களை வெல்லவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றன.
ஆனால், நேற்று மாலை வெளியாகியுள்ள லோக் போல் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே ஒட்டுமொத்தமாக அள்ளும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சில சிட்டிங் எம்.பிக்கள் மீது அதிருப்தி நிலவினாலும், ஒட்டுமொத்த அலையின் அடிப்படையில் அவர்களும் கரை சேர்வார்கள் எனத் தெரிவித்துள்ளது லோக் போல் கணிப்பு.
இந்தக் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெல்ல வாய்ப்பிருப்பதற்கான காரணங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களின் வாக்குகள், அதிமுக, பாஜக என இரு கூட்டணிகளுக்கும் சிதறுவதால், திமுக கூட்டணி முழு வெற்றியைப் பெரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை, தங்கள் வாக்கு வங்கியை இந்த முறையும் தக்க வைத்துக் கொள்ளும், ஆனால் வாக்குகள் சிதறுவதன் காரணமாக வெற்றி கிடைக்காமல் போகும். பாஜக, பாமக கூட்டணியை பொறுத்தவரை இந்த கூட்டணிக்கு பல்வேறு தொகுதிகளில் வாக்குகள் பரிமாற்றமாகாது என்பதையே கள நிலவரம் எடுத்துக் காட்டுவதாக லோக் போல் கணிப்பு தெரிவிக்கிறது.
சிறுபான்மையினர் வாக்குகளின் பெரும் பகுதி திமுக கூட்டணிக்கே செல்வதாகவும், பாஜகவுக்கு எதிரான எண்ண ஓட்டம், தமிழ்நாட்டில் இன்னும் களத்தில் இருக்கிறது எனவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.