‘விருப்பு ஓய்வு பெற்று 2 ஆண்டாகியும் பணப்பலன் கிடைக்கவில்லை’ - திருமங்கலம் ஆசிரியர் மனைவி புலம்பல்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை திருமங்கலத்திலுள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்றியவர் சத்தியவரதன். 2018ம் ஆண்டு திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டாக அவர் எவ்வித சுய வேலையும் செய்ய இயலாது நிலையில் இருந்தார். அவரது உடல் நிலை ஒத்துழைக்காத நிலையில், தனது பணியில் இருந்து 2022 ஆண்டு மார்ச் 31ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் விருப்ப ஓய்வில் சென்ற பிறகு அவருக்கு வரக் கூடிய பணப்பலன்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல் தாமதம் ஆகி கொண்டு வந்தது. 2023 ஜூன் 23ல் அவரின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அவர் விருப்பம் ஓய்வு பெற்று 2 ஆண்டாகியும் அவருக்கான பண பலன்கள் கிடைக்கவில்லை. அவரது இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தும் பணப்பலன் கிடைக்காமல் தவிப்பதாக அவரது மனைவி பதி பாரதி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எனது கணவர் 2018ம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுமார் ரூ.15 முதல் 20 லட்சம் வரை மருத்துவச் செலவு ஆனது. உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியே மருத்துவச் செலவை செய்தோம் ஆனாலும் 2023ல் அவரது உடல்நிலை மிக மோசமாகி உயிரிழந்தார். இன்று வரை அவருக்கான எவ்வித பணப் பலனும் கிடைக்கவில்லை. எங்களது ஒரே ஒரு மகனுக்கு ஜூன்-9ம் தேதி திருமணமும் ஏற்பாடு செய்துள்ளோம்.

பண கஷ்டத்தில் உள்ளேன். கணவருக்கான பணப்பலன் சுமார் ரூ.15 லட்சத்தை வழங்குவதில் கல்வித் துறை அதிகாரிகள் அலைக்கழைப்பு செய்கின்றனர். மாவட்ட கல்விக் அலுவுலகத்தில் அதிகாரிகள சந்தித்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முறையிட்டாலும் கிடைக்கவில்லை. எனது ஒரே மகனின் திருமணத்தை கருத்தில் கொண்டு, கணவருக்குரிய பணப் பலன்களை வழங்க தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரியிடம் கேட்டபோது, “புதிதாக பொறுப்பேற்ற பின், ஓவிய ஆசிரியர் சத்ய வரதன் பணப்பலன் குறித்த பைல் எனது கவனத்திற்கு வந்தது. அவரது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும் வகையிலும், அவரது மகனிடம் ஆட்சேபனை கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அனுப்பியுள்ளோம். விரைவில் அவருக்கான பணப்பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE