தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்பட அக்கட்சியினர் பலர் தமிழகத்தில் தங்கள் பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர் இன்று (ஏப்ரல் 15 நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்குசேகரிக்க உள்ளார். இதையொட்டி கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டிக்கு நேற்று வர இருந்தார். ஆனால் திடீரென்று பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்தார்.
இதன்படி கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பயணித்து வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த பை உள்பட அனைத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணமோ, பொருட்களோ சிக்கவில்லை.
அதன்பின்னர் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்கிறார். இதன் பின் குன்னூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கோவை தொகுதிக்குச் செல்கிறார்.