திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் முருகையன் இல்ல திருமண விழா மணக்கால் அய்யம்பேட்டை எழில் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரவு திருமண மண்டபத்தின் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் செல்லும் சாலையின் இரு புறத்திலும் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தரும் திமுக பிரமுகர்களை வரவேற்கும் விதமாக திமுக கொடி பொருத்திய இரும்பு கம்பம் நடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மணக்கால் அய்யம்பேட்டை பெருமாள் வடக்கு வீதி பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவரின் மகன் கோகுல் வயது 26 என்பவர் நேற்று இரவு 11 மணி அளவில் மணக்கால் அய்யம்பேட்டையில் இருந்து ஸ்ரீவாஞ்சியம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, தவறுதலாக திமுக கொடி கம்பத்தில் கை வைத்துள்ளார்.
அப்போது அந்த கொடிமரம் அருகில் தாழ்வாகச் சென்ற மின் கம்பியில் கொடிக் கம்பம் பட்டு மின்சாரம் பாய்ந்து கோகுல் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
» பள்ளிப்பட்டு அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 7 பேருக்கு வாந்தி, மயக்கம்
» புதுச்சேரி - கடலூர் தடத்தில் பிஆர்டிசி பேருந்துகள் மீண்டும் இயக்கம்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குடவாசல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப் பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த கோகுலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கோகுலின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து திருவாரூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மணக்கால் அய்யம்பேட்டை என்கிற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த திருவாரூர் மின்வாரிய அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதுவரை உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் முன்வரவில்லை. தற்காலிகமாக சாலை மறியலை மட்டும் கைவிட்டு ள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகின்றது.