எடப்பாடியாரும் பிரதமராகலாம்! - செல்லூர் ராஜூ அமர்க்களப் பேட்டி

By கரு.முத்து

எப்போதும் லைம்லைட்டில் இருக்க விரும்புபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதற்காக தன்னை யாரும் கலாய்த்தாலும் அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மனதில் பட்டத்தை வெள்ளந்தித் தனமாக விதைத்துக் கொண்டே இருப்பார். அப்படித்தான், ”மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி பிரதமராகவும் வாய்ப்பு இருக்கிறது” என்று இப்போது அதிரடி கிளப்பி இருக்கிறார்

எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரையில் பம்பரமாக பணியாற்றி வருகிறார் செல்லூர் ராஜூ. பிரச்சாரம் முடிந்து களைத்துப் போய் ஜாகைக்கு திரும்பியவரை நள்ளிரவில் லைனில் பிடித்தோம். அப்போதும் ஃபிரெஷ்ஷாகவே பேசினார்.

அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

மிகவும் அமோகமாக இருக்கிறது. இப்போதுதான் இஸ்லாமியர்களும் எங்களிடம் நெருங்கி வந்து பழகுகிறார்கள், கிறிஸ்தவர்கள் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். வணிகர்கள் இந்த ஆட்சியில் தாங்கள் பட்ட கஷ்டத்தை உணர்ந்து எங்கள் ஆட்சியின் பெருமையை கூறுகிறார்கள். மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிமுகவுக்கு ஆதரவாக எங்கள் பின்னால் அணிதிரள்கிறார்கள். இதை நான் மதுரையை வைத்து மட்டும் சொல்லவில்லை... தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் அதனால் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்.

கட்சி மூன்று துண்டாக உடைந்திருக்கிறது, கூட்டணி பலம் இல்லை. அப்படி இருக்கையில் அதிமுக வெற்றி பெறும் என்று எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?

மதுரை மிக முக்கியமான அரசியல் களம். இங்கே என்ன உணர்வுகள் மக்களிடம் இருக்கிறதோ, அதுதான் தமிழ்நாடு முழுவதும் பிரதிபலிக்கும். மதுரையைப் பொறுத்தவரை இந்த முறை அதிமுக அமோக வெற்றி பெறும். மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். அதை வைத்துப் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக வெற்றி பெறும்.

கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்கிறார்களே..?

அதெல்லாம் சும்மா. அது கருத்துக்கணிப்பு இல்லை; கருத்துத் திணிப்புதான். இந்தக் கடைசி பத்து நாட்களில் தான் களம் யாருக்கு சாதகமாக மாறகிறது என்பது தெரியும். யார் அதிக அளவில் உழைக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும். அதிமுக கடுமையாக உழைக்கிறது அதனால் முடிவுகள் எங்களுக்குத்தான் சாதகமாக வரும்.

திமுக அரசின் சாதனைகள் மக்களைச் சென்று சேர்ந்திருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதே?

அதெல்லாம் ஒன்றுமில்லை. மக்கள் திமுக மீது கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். திமுக 520 வாக்குறுதிகள் கொடுத்தார்கள். அதில் ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத் தொகை தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். அனைத்து நகரப் பேருந்திலும் பெண்களுக்கு இலவச பயணம் இல்லை. குறிப்பிட்ட ஒரு சில பேருந்துகளில் மட்டுமே அதை அனுமதிக்கிறார்கள். இப்படி எந்த வாக்குறுதியையும் அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.

மின் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி என எல்லாம் உயர்ந்து விட்டது. பாப்பா குடிக்கிற பாலுக்கும் விலை ஏற்றிவிட்டார்கள். ஒரு கிலோ அரிசிக்கு 15 ரூபாய் வரை விலை ஏறியிருக்கிறது. மளிகைப்பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். தாலிக்குத் தங்கம் உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்து, மின்வாரியம் என அனைத்து கார்ப்பரேஷன் ஊழியர்களும் அரசின் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வெறுப்பில் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் சேர்ந்து திமுக அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

மதுரை எம்பி-யான வெங்கடேசனின் செயல்பாடுகள் எப்படி?

அவர் ஒரு நல்ல எழுத்தாளர், கதாசிரியர், நன்றாகப் பேசக்கூடியவர்; அவ்வளவுதான். மற்றபடி கீழே இறங்கி மக்களுக்கு எதையும் செய்யக்கூடியவர் இல்லை. மதுரைக்கு குறிப்பிடத்தகுந்த எதுவும் அவர் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாக்குக் கேட்டுச் சென்றால் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து அவர்கள் கையில் இருந்து காசை வேட்பாளருக்கு கொடுப்பார்கள். ஆனால் இப்போது கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாக்காளர்களுக்கு காசு கொடுக்கிறார். இதற்காக வெங்கடேசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அவரது தாத்தா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். அவருடைய பேச்சையும், எழுத்தையும் எதிர்க்கட்சிக்காரர்களே ரசிப்பார்கள். ஆனால், பேரன் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரது பேச்சைக் கேட்டு அந்தக்கட்சிக்காரர்களே முகம் சுளிக்கிறார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். முடியாததை எல்லாம் வாக்குறுதியாக அளிக்கிறார்.

ஆனால், அவரது பேச்சைக்கேட்க மக்கள் அதிகம் வருவதாக சொல்கிறார்களே?

அவரது கூட்டத்துக்கு மக்களாக வருவதில்லை. காசு கொடுத்து ஆட்களை கூட்டிச்செல்கிறார்கள். ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி அவரது கன்னத்தை தடவி கொடுக்கிறார். ஆனால் அவர் கட்டியிருப்பது அதிமுக கட்சி சேலை. இப்படித்தான் அனைவரையும் காசு கொடுத்து கூட்டிக்கொண்டு செல்கிறார்கள். மக்களும் இப்போது அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்று பார்ப்பதில்லை எந்தக் கட்சிக்கு காசு கொடுத்து கூப்பிடுகிறார்களோ அந்தக் கட்சிக்கு கிளம்பி விடுகிறார்கள்.

ஆனால், அதற்காக அவர்கள் அந்தக் கட்சிக்கு வாக்களித்து விடுவார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருப்பார்கள். இன்றைய தேதிக்கு யார் 500 ரூபாய் கொடுத்து அழைக்கிறார்களோ அவர்கள் பின்னால் கூட்டம் காட்ட சென்று விடுகிறார்கள்.

அதிமுக சீன்லயே இல்லை... திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என்கிறார்களே?

உண்மையான கள நிலவரம் அது இல்லை. உண்மையில் போட்டி என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் இருக்கிறது. ஆனால், அது இல்லாததுபோல அவர்கள் சித்தரிக்கிறார்கள். அதன்மூலம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக் கிறார்கள். பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

மோடி பலமுறை இங்கு வருகிறார். அதனால் அதிகம் வாக்குகள் கிடைத்துவிடும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் பணத்தை எதற்கு நம்புகிறார்கள்? ஏன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராகிறார்கள்? ஒரு பைசா கூட செலவழிக்காமல் வெற்றி பெறுவேன் என்று அண்ணாமலை சொன்னார். ஆனால், அவரும் அனைத்திற்கும் காசு கொடுத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. கூட்டம் கூட்டுவதற்கு உட்பட அனைத்திற்கும் பாஜகவில் காசு கொடுக்கிறார்கள்.

பிரதமர், ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் இவர்கள் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

எப்படியாவது ஒரு மாயை உருவாக்கி இப்போது வெற்றி பெற முடியாவிட்டாலும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மோதிப் பார்க்கலாமா என்பதற்காக இப்படி செய்கிறார்கள். அவர்கள் முயற்சிகள் எதுவும் தமிழ்நாட்டில் பலிக்காது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

அதற்குள் எல்லாம் நாங்கள் போக விரும்பவில்லை. அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.

மத்தியில் மீண்டும் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும்?

நான் மதுரை தேர்தலையே மனதில் வைத்துச் செயலாற்றுவதால் அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.

அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார்?

ஜனநாயக நாட்டில் எம்பி-க்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஐ.கே.குஜ்ரால், தேவேகௌடா, சந்திரசேகர் போன்றவர்கள் எல்லாம் பிரதமராக இருந்தார்களே? அவர்களெல்லாம் எத்தனை எம்பி-க்களை வைத்திருந்தார்கள்? அப்போது உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரதமராக ஆனார்கள். அதுபோல தற்போதும் எதுவும் நடக்கலாம்; எடப்பாடியாரும் பிரதமர் ஆகலாம்.

இரண்டு கூட்டணிகளில் எம்பி-க்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதைப் பொறுத்து நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாற்பது எம்பி-க்கள் எங்களிடம் இருக்கும்போது எடப்பாடியார் பிரதமர் ஆக வாய்ப்பு வரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால் அவரை பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்னிறுத்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE