திருப்பத்தூர் முழுவதும் மணல் திருட்டை தடுத்து பாலாற்றை மீட்க கோரிக்கை

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்று பகுதிகளில் அத்துமீறி நடந்து வரும் மணல் திருட்டை தடுத்து, பாலாற்றை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவ சாயிகளும், நீர்வள ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு கோலார் மாவட்டம் வழியாக ஏறத்தாழ 90 கி.மீ பயணித்து ஆந்திராவில் 30 கி.மீ பயணித்து புல்லூர் எனும் இடத்தில் நுழைந்து அகண்ட பாலாறாக தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பாய்ந்தோடி செங் கல்பட்டு மாவட்டம் வயலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 47 கி.மீ., தொலைவுக்கு பாலாறு விரிந்து இருந்தாலும், கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளில் கனமழை பெய்தால் மட்டுமே அங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை கடந்து தமிழக பாலாற்றில் தண்ணீர் எட்டி பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

அவ்வாறு வரும் சொற்ப தண்ணீர் கூட ஓரிரு நாளில் காணாமல் போகும் அளவுக்கு தற்போதைய பாலாற்றின் நிலை மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பாலாற்றில் அத்துமீறி நடைபெறும் மணல் திருட்டும், மாவட்டம் முழுவதும் உள்ள பாலாற்று பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தினசரி நீர் உறிஞ்சப்படுகிறது.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் 1,400 அடிக்கு கீழே சென்று விட்டதாலும், ஆக்கிரமிப் பாளர்களின் பிடியில் பாலாறு இருப்பதால் வட மாவட்ட விவ சாயிகளின் வாழ்வாதாரமான பாலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

கோடை காலம் வந்து விட்டாலே பாலாற்றில் அமைக்கப் பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கூடுதல் தண்ணீர் உறிஞ்சப் படுகிறது. இது ஒருபுறம் இருக்க நாட்றாம் பள்ளியில் தொடங்கி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வரை பாலாற்றில் இரவு, பகல் பாராமல் அத்துமீறி நடைபெறும் மணல் திருட்டினால் பாலாறு என்ற ஆறு இருந்ததற்கான அடையாளமே எதிர்காலத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

ஆகவே, பாலாற்றில் நடை பெறும் மணல் திருட்டை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பாலாற்று நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கிடப்பிலேயே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று பகுதிகளில் 15 முதல் 20 அடி தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்.

ஆனால், தற்போது 1,300 முதல் 1,500 அடிக்கு கீழே தண்ணீர் சென்று விட்டது. காரணம், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட் சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சி களுக்கு பாலாற்றில் இருந்து தான் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. பாலாறு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு தினசரி 1 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

இது தவிர ஜோலார்பேட்டை ரயில்வே நிர்வாகம், திருப்பத்தூர் வனத்துறை நிர்வாகம், கேத்தாண்டப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு அம்பலூர் பாலாற்றில் இருந்து தான் தினசரி தண்ணீர் எடுக்கப்படுகிறது.

பாலாறு மட்டும் அல்ல, பாலாற்றை ஓட்டியுள்ள விவசாய நிலங்கள், கிராமப்புற பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழே சென்று விட்டது. ஆந்திராவிலிருந்து புல்லூர் வழியாக தமிழகத்துக்குள் நுழையும் பாலாறு ராமநாயக்கன் பேட்டை, அம்பலூர் வழியாக வாணியம்பாடி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பாய்கிறது. வருங்கால சந்ததியினருக்கு விவசாயம் மற்றும் குடிநீரை சேமிக்கும் வகையில் அம்பலூர் பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இப்பகுதி விவசாயிகள் 80 சதவீதம் பேருக்கு தனிப்பட்ட கிணறு வசதி இல்லை. தற்போது உள்ள கிணற்று தண்ணீரை விவசாயிகள் நம்பியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் இப்பகுதியில் 50 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பாலாறு முழுவதும் இரவு, பகல் பாராமல் அத்துமீறி திருடப்படும் மணல் திருட்டையும் தமிழக அரசு தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, பகிரங்கமாக டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், ‘பொக்லைன்’ வாகனங்கள் மூலம் கனிம வளம் சுரண்டப்படுவதை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுபவர் களை அடையாளம் கண்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆதங்கத்துடன் கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது அரசின் கொள்கை முடிவு. அதே நேரத்தில் மணல் திருட்டை தடுக்க காவல் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மணல் கொள்ளை நடைபெறும் இடங்களை பொது மக்கள் அடையாளம் காட்டினால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE