முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர் கழக தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் (98) உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆர்.எம்.வீரப்பன். அண்மையில் ஆர்.எம்.வீரப்பன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரை வாழ்த்தினார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆர்.எம்.வீரப்பனின் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் வாழ்த்து கூறினார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆர்.எம்.வீரப்பன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
தமிழ் திரைப்படங்களின் பழம்பெரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் என பல முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தவர்.
வயது மூப்பு காரணமாக அவர் தற்போது காரணமாக பொதுவாழ்வில் இருந்து விலகி உள்ளார். 1977-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த இவர் பின்நாளில் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை நிறுவி, திமுகவுடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.