அதிமுகவை ஒழிப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளதற்கு, அவரை பார்த்து நடந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக பெரிதும் விரும்பியது. ஆனால் கூட்டணிக்கு அதிமுக முரண்டுபிடித்ததில், தனி அணியாக போட்டியிடுகிறது. இதனால் தற்போது இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி நரியைப் போன்றவர் என்பதாக அண்ணாமலை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதற்கு வாலறிந்த நரி அண்ணாமலை என்று அதிமுக பதிலுக்கு விமர்சித்திருந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்னும் ஒருபடி மேலே போய் அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டும் என்று கர்ஜித்தார்.
2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்தார். இதனால் மிகுந்த ஆவேசமடைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை மிகக் கடுமையாக சாடிப்பேசினார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார். தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த கட்சி. உன்னைப்போல் எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா. அதிமுக மட்டும் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்காது, ஏற்றம் பெற்று இருக்காது.
அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததால் தான் இந்த மண்ணில் உள்ள அத்தனை பேரும் நன்மை பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்கள் கட்சியையா நீ அழிக்கப் பார்க்கிறாய்? 1998 ல் தாமரைச் சின்னம் என்ற ஒன்று இருப்பதையே ஊர் ஊராகச் சென்று காட்டியதே அதிமுக தான். தாமரை என்றால் எந்த கட்சியின் சின்னம் என்றே தமிழகத்தில் தெரியாமல் இருந்தபோது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரு ஊராக தாமரையை எடுத்துச் சென்று இதுதான் சின்னம் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
நீ மத்தியில் இருப்பவர்களால் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர். எப்போது வேண்டுமானாலும் தலைவர் மாற்றப்படலாம். ஆனால் அதிமுக அப்படியல்ல. இங்கே உழைத்தால் ஏற்றம் பெறலாம். ஆனால் அங்கே, டெல்லியில் நினைத்தால் தலைவராகலாம். அப்படி அப்பாயின்மென்ட்டில் வந்திருக்கிற நீ கொஞ்சம் கவனமாக பேசு. அதிமுக ஒரு மாதிரியான கட்சி. பார்த்து நடந்துக்க.
ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்பியாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்று பேசுகிறாய். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பாடியுள்ளார். ஆனால் நீ அப்படி இல்லை. தலைகணத்தில் ஆடுகிறாய். இது நிலைக்காது. மற்றவருக்கு மரியாதை கொடுத்து திரும்ப பெற்றால் தான் மனிதனாக பிறந்தவர்களுக்கு மரியாதை" என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.