இனிப்புக் கடைக்குச் சென்ற ராகுல்... ஸ்டாலினுக்கு வழங்கி அன்புப் பரிமாற்றம்!

By காமதேனு

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இனிப்பு கடைக்குச் சென்று தானே இனிப்புகளை வாங்கி, அதை எடுத்துச் சென்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்

இனிப்புக்கடை மற்றும் பொதுக்கூட்ட மேடையில் ராகுல்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப் பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்தியா முழுவதும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அவ்வகையில் நேற்று அவர் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்தார். கேரளாவில் இருந்து நேற்று மதியம் திருநெல்வேலி வந்த ராகுல்காந்தி அங்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர், அங்கிருந்து கேரளா சென்ற அவர், மாலையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார்.

கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட ராகுல்காந்தி வழியில் சிங்காநல்லூரில் திடீரென காரை நிறுத்தினார். அதனால் அனைவரும் பரபரப்பு அடைந்தனர். ஆனால் வெகு இயல்பாகக் காரை விட்டு இறங்கிய ராகுல் காந்தி அங்கிருந்த இனிப்பு கடைக்குள் நுழைந்தார்.

அங்கு பார்த்துப் பார்த்து சில வகை இனிப்புகளை வாங்கினார். திடீரென கடைக்குள் அவரைப் பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடன் செஃல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுல் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர், தான் வாங்கிய இனிப்புகளை அவரிடம் கொடுத்து தனது அன்பை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். ராகுல்காந்தி இனிப்புக்கடையில் இனிப்பு வாங்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE