தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்தை பாஜக வட்டாரங்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக விளங்கி வருகிறார். அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. இந்துத்துவ கொள்கையில் அழுத்தமான ஈடுபாடு உடையவரான நடிகர் ரஜினிகாந்த்தை தங்கள் பக்கம் இழுக்க துக்ளக் ஆசிரியர் சோ மூலமாக பல்வேறு முயற்சிகளை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. ஆனால், நேரடியாக பாஜகவுக்கு செல்லாவிட்டாலும் பாஜக ஆதரவு கருத்துக்களை அவ்வபோது ரஜினிகாந்த் தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழருவி மணியன் உள்ளிட்டவர்கள் ரஜினிகாந்தை தீவிர அரசியலுக்குள், நேரடி அரசியலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கினர். அதையடுத்து விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென அந்த முடிவில் இருந்து அவர் பின் வாங்கினார். அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கி தற்போது சினிமா பணிகளை மட்டும் அவர் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி இல்லாமல் தனியாக கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலரும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் தமிழ்நாட்டில் கிடைக்காது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்க முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் ஆதரவு தெரிவித்ததைப்போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவரிடம் பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அப்படி ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, பத்தாண்டு கால பாஜக சாதனைகள் குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டாலே போதும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அரசியலில் தற்போது நேரடியாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அனைவரிடமும் இணக்கமாக ரஜினிகாந்த் பழகிவரும் நிலையில் பாஜகவின் இந்தக் கோரிக்கைக்கு அவர் செவிமடுப்பாரா என்பது இனிதான் தெரியவரும்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!
அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!
நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு சிக்கலா?... தேர்தல் அதிகாரி புகரால் பெரும் பரபரப்பு!
பாஜக வேட்பாளரால் சர்ச்சை... திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் பூசியதால் பரபரப்பு!
அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!