போலீஸாரின் தடுப்பையும் மீறிச்சென்று ரயில் மறியல்... சிவகங்கையில் பரபரப்பு!

By காமதேனு

சிவகங்கையில் போலீஸாரின் தடுப்பையும் மீறிச்சென்று ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தின் தலைநகராக திகழும் சிவகங்கை நகரம் மிக முக்கியமானது. ஆனால் அந்த வழியாகச் செல்லும் பெரும்பான்மையான ரயில்கள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக இந்த வழியாகச் சென்று வந்த மன்னார்குடி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில், செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில் ஆகியவை இந்த வழியாகச் சென்றாலும், ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. பல்லவன் ரயில் காரைக்குடி வரை மட்டும் இயக்கப்படுகிறது.

பகல் நேரங்களில் சிவகங்கை வழியாக சென்னைக்கு ரயில் இல்லை. மேலும், மத்திய அரசின் ரயில்வே திட்டங்களிலும் சிவகங்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி, திமுக நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில், அனைத்து கட்சி மற்றும் அமைப்பினர் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம், கடையடைப்பு நடைபெற்றது. நகரில் ஆட்டோ, வேன்கள் ஓடாமல் முக்கிய வீதிகள் வெறிச்சோடின.

இதையொட்டி ரயில் நிலையம் முன்பு இன்று ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இன்று காலை போராட்டத்திற்கு வந்தவர்களை தடுப்பு அமைத்து போலீஸார் தடுத்தனர்

இருப்பினும் தடுப்பை மீறி திமுக நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன் உட்பட பலர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE