பாஜக வேட்பாளரால் சர்ச்சை... திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் பூசியதால் பரபரப்பு!

By காமதேனு

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், சாத்தனூரில் திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் ஆகியவற்றை பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமான் பாஜக சார்பில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல்

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக அமைச்சர்கள் களமிறங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்குசேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சாத்தனூர், கொளமஞ்சனூர், தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் திருநீறு பூசி, குங்குமப் பொட்டு வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஏற்கெனவே திருவள்ளுவர் படத்திற்கு காவி வர்ணம் பூசிய பாஜகவிற்கு திமுக, மதிமுக, இடசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசிய பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்.

இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் சாத்தனூர் திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் பாஜக வேட்பாளர் திருநீறு பூசி, குங்குமப் பொட்டு வைத்துள்ளது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE