கருணாநிதியின் நூற்றாண்டு விழா... பங்கேற்க சென்னை வருகிறார் சோனியா!

By காமதேனு

திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள அக்டோபர் 14-ம் தேதி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வருகிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுகவினரால் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக மகளிரணி சார்பில் அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் உள்ளிட்டோருக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார். அதில் கலந்து கொள்வதாக சோனியா காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி

கடைசியாக 2018-ம் ஆண்டு கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி தமிழ்நாடு வந்திருந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டிற்கு அவர் வராத நிலையில் தற்போது அடுத்த மாதம் வர இருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தருவதால் திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசி முடிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE