இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!

By காமதேனு

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

கடந்த 17 மற்றும் 18 ம் தேதிகளில் பெய்த அதீத கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் வீடுகள் என அனைத்திலும் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மத்திய குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பார்வையிட்டு வெள்ள பாதிப்புக்கள் குறித்து ஆய்வு செய்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் மிக தீவிரமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்தியக்குழு

வெள்ள நீர் அகற்றப்பட்டு பெரும்பாலான அலுவலகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஐந்தாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இன்று காலை முதல் ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கியுள்ளன. முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் திட்டமிட்டபடி புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாவட்டங்களிலும் மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE