வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் சிறு வணிகர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாத கடைசியில் இன்ப அதிர்ச்சியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த நவம்பர் மாதத்தில் 1,942 ரூபாயாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் 26 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று 39 ரூபாய் விலை குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சிலிண்டர் விலை 1929.50 ரூபாயாக உள்ளது. அதேநேரம், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.