பள்ளிப்பட்டு அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 7 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு திருத்தணி, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள பெருமாநல்லூர் கிராமத்தின் ஒரு பகுதியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, இரும்பு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதட்டூர்பேட்டை-பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 15 குடும்பங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து அதில் கழிவுநீர் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறியாமல், அந்த கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால், வரதராஜன்( 52), ஜெயகாந்தன்(41), இளமாறன்(17) மற்றும் காயத்ரி(24), தரணி( 17), பூர்ணிமா( 13), ஜெயப்பிரியா (13) ஆகிய 7 பேர் இன்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வரதராஜன் உள்ளிட்ட 6 பேர் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இளமாறன் (17), பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்துக்கு காரணம், பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என, பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE