கேரள தேவாலயங்களில் 'மணிப்பூர் ஸ்டோரி' ஆவணப்படம் திரையிடல்... கடும் கொந்தளிப்பு!

By காமதேனு

மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படமான 'மணிப்பூர் ஸ்டோரி' கேரள மாநிலத்தில் தேவாலயத்தில் திரையிடப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

'தி கேரளா ஸ்டோரி'

மதமாற்றம் குறித்த மையக்கரு கொண்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளாவில் திரையிடப்படுவதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் அதைமீறி இடுக்கி மறைமாவட்டத்தில் உள்ள ஜீரோ மலபார் தேவாலயத்தில் பங்கு தந்தை ஜீன்ஸ் காரக்கட் என்பவர் மூலம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முதன் முதலாக திரையிடப்பட்டது.

இதுதொடர்பாக கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்ததால், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதைமீறி கண்ணூர் மறைமாவட்டத்தில் உள்ள செம்பண்தொட்டி தேவாலயத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிடப்பட்டது. இதேபோல் எர்ணாகுளத்தில் உள்ள சில தேவாலயங்களில் 'தி கேரளா ஸ்டோரி' திரையிடப்பட்டது.

மணிப்பூர் கலவரம்

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளால் இந்தத் திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அப்போது கேரளாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் அதற்கு போட்டியாக தற்போது மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஆவணப்படம் கேரளாவில் திரையிடப்படுகிறது.

எர்ணாகுளம் அங்கமாலி மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் சான்ஜோபுரம் தேவாலயத்தில் நேற்று மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. அங்கு விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு இந்த மணிப்பூர் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

மணிப்பூரில் கலவரத்தை தடுப்பதில் மணிப்பூர் அரசு படுதோல்வி அடைந்து உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் அதுகுறித்த ஆவணப்படம் திரையிடப்படுவது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படம் திரையிடப்படுவதால் அங்குள்ள பாஜகவினர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இது கேரளா அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE