சேலம் - ஈரோடு மாவட்டங்கள் இடையே விசைப் படகு போக்குவரத்து நிறுத்தம்

By த.சக்திவேல்

மேட்டூர்: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை நீர்மின் கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக, தேக்கி வைத்திருந்த தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டது. இதனால் சேலம் - ஈரோடு மாவட்ட இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அப்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக காவிரி ஆற்றின் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை உள்ளிட்ட இடங்களில் கதவணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கதவணைகளில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் 15 நாட்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது, தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வெளியேற்றப்படும்.

இந்நிலையில் சேலம் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. தற்போது, கதவணையில் பராமரிப்பு பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், அணையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், தண்ணீரின்றி குட்டையாக காட்சியளிக்கிறது.

இதனால் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டம் இடையிலான விசைப்படகு போக்குவரத்து வரும் 26-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நீர்மின் கதவணை பாலம் மூலம் இரு சக்கர வாகனத்தில் மட்டும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

பூலாம்பட்டி காவிரி ஆற்றின் கரையில் இருந்து எடப்பாடி நகராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பூலாம்பட்டியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், எடப்பாடி நகராட்சி பகுதிக்கு காவேரி ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து 5 மோட்டர்கள் மூலமாக தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் ஏற்றப்பட்டு, வழக்கம் போல் எடப்பாடி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். குடிநீர் விநியோகம் சீராக கிடைக்கும் வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எடப்பாடி நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE