பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), போட்டியிடும் 23 தொகுதிகளில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், லாலுபிரசாத் யாதவின் இரு மகள்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு மகாகத்பந்தன் கூட்டணியில் (தேசிய அளவில் இந்தியா கூட்டணி) லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு முடிந்துள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடியின் 26 தொகுதிகளில் உள் ஒதுக்கீடாக, முன்னாள் அமைச்சர் முகேஷ் சாஹ்னியின் 'விகாஷீல் இன்சான் கட்சி'க்கு 3 தொகுதிகளை ஆர்ஜேடி கடந்த வாரம் ஒதுக்கீடு செய்தது.
அந்த 3 தொகுதிகள் போக, ஆர்ஜேடி நேரடியாக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, லாலுபிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது தந்தை பலமுறை வென்ற சரண் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல், லாலுபிரசாத்தின் மற்றொரு மகளான மிசா பாரதி, பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
22 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவான் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை ஆர்ஜேடி அறிவிக்கவில்லை. இத்தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் பல ஆண்டுகளாக கட்சியின் வேட்பாளராக இருந்து வந்த முகமது ஷஹாபுதீன், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவரது மனைவி ஹீனாவுக்கு அத்தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவரால் வெற்றி பெற இயலவில்லை. கடந்த 2021ல் முகமது ஷஹாபுதீன் மறைவுக்குப் பின்னர், லாலுவு குடும்பத்தினருக்கும், ஹீனாவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை. இந்நிலையில் அத்தொகுதியில் மட்டும் ஆர்ஜேடி இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.