விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி, விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் இத்தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள கணேசன் நகரில் ஒரு வீட்டில் அவர் தங்கியிருக்கிறார்.
இந்த வீட்டில் தங்கியிருந்து தான், தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது திருமாவளவன் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெருமளவில் அந்த வீட்டில் முன்பாக கூடினர். அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. வருமான வரித்துறையினரின் சோதனையில் அங்கு எதுவும் சிக்கவில்லை.
அதன் பின்னர் வீட்டின் உரிமையாளரிடம், கடலூரில் உள்ள உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று புதன்கிழமை மதியம் 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனையால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.