51 அடியை எட்டிய மஞ்சளாறு அணை; கரையோர மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை!

By காமதேனு

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மஞ்சளாறு அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 50.80 அடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 51 அடியை எட்டியது.

இதையடுத்து தேனி மாவட்டத்தின் மஞ்சளாறு ஆற்றங்கரையோர பகுதிகளான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதிகளான தும்மலபட்டி, ஊத்தங்கல் புதுப்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுப்பணித்துறையினர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அணைக்கு நீர்வரத்து 128 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையில் நீர் இருப்பு 357 மில்லியன் கண்ணாடியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE