அண்ணா பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது; அண்ணாமலை உறுதி!

By காமதேனு

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து கூறிய கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த காலங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் எனவும் நீண்ட காலத்திற்கு பிறகு இச்சட்டம் நிறைவேறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

சென்சஸ் முடிந்ததும் அடுத்து வரும் தேர்தலில் இந்த இட ஒதுக்கீடு அமலில் வரும் என கூறிய அவர் பாஜக, கட்சிக்குள் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கி வருகிறது என்றார். மேலும் இதை பெண்கள் உரிமையாக பாஜக பார்க்கிறது எனவும் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம் எனவும் தெரிவித்தார். வெகு விரைவில் 33 சதவீதத்திற்கு மேல் பெண்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என தெரிவித்த அவர், ஏகமனதாக அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றுள்ளனர் என்றார்.

இரண்டு முறை இதற்கு முன்பு நாடாளுமன்ற எம்.பி.க்கள் சீட் உயர்த்தியுள்ளோம். இதில் ஸ்டாலின் சொல்வது போல எந்த சதியும் இல்லை எனவும், சதி என்ற வார்த்தையை முதலமைச்சர் எப்படி பயன்படுத்தலாம்? எனவும் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை எனவும் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவில் உள்ள சில தலைவர்களுடன் அண்ணாமலைக்கு பிரச்சினை இருக்கலாம் எனவும் கூறிய அண்ணாமலை, மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்பவர்கள் கூட்டணியில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

செல்லூர் ராஜூ சொல்வது போல் மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி என நான் எப்படி அறிவிக்க முடியும்? என்று கூறியவர், எனது தன்மானத்தைக் கேள்விக்கு உள்ளாக்கினால் பேசுவேன். அது எனது உரிமை எனவும் தன்மானத்தை விட்டு தந்து அரசியல் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்.

எனக்கு யாரிடமும் பிரச்சினை இல்லை. அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகள், வெவ்வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள் என்றார்.

தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரைக்குறைவாக நான் விமர்சிக்கவில்லை. எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை, பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே இலக்கு என்றார். என் கட்சியை நான் வளர்க்கிறேன், திமுக விஷம். திமுகவை அடியோடு வெறுக்கிறேன். பேச்சிற்கு பேச்சு நான் பேச விரும்பவில்லை. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணா பற்றி சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன் என்றார். மேலும் மோடியை ஏற்றால் கூட்டணி இருக்கும் எனவும் கூறினார்.

சனாதனம் எங்கள் உயிர் நாடி என்றும் சனாதனம் வாழ்க்கை கோட்பாடு என்றும் சனாதன தர்மம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் கூறினார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவார் என கூறிய அவர், இந்தியா கூட்டணியில் 5 மாநிலங்களில் கூட்டணி இல்லை எனவும் அக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் எனத் தெரியாது எனவும் விமர்சித்தார். மேலும் நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் எனவும் நான் இப்படியே தான் இருப்பேன் எனவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE