அதிர்ச்சி... குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம்

By காமதேனு

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் அதிகாலையில் குட்டியுடன் 3 காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

கோவை மாவட்டம், மாங்கரை மற்றும் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள் கொண்ட கூட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை ஆறு மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்புகள் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE