கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மர்மமான முறையில் இளைஞர் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் அம்புலன்ஸை சிறைப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் உள்ளார். இவர் நேற்று இரவு நெய்வேலியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ரோந்து பணியில் இருந்த நெய்வேலி நகர காவல் துறையினர் ராஜ்குமார் சோதனை செய்தனர்.
அப்பொழுது அவர் குடித்து இருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக கூறி வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து, நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு ராஜகுமாரை அவரது இரு சக்கர வாகனத்துடன் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு ராஜகுமாரை வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை நெய்வேலி நகர காவல் நிலையம் அருகே சாலையில் பலத்த காயங்களுடன் ராஜ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த நெய்வேலி நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் ஏற்றினர்.
» கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை
» வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
அப்பொழுது அங்கு வந்த ராஜ்குமார் உறவினர்கள் போலீசார் ராஜ்குமாரை தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என்று கூறி, வடக்குத்து அருகே
சென்னை - கும்பகோணம் சாலையில் சாலையில் ஆம்புலன்ஸை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவல் உயர் அதிகாரிகள் உறவினர்களிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் போலீசார் உயிரிழந்த ராஜ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸை மூலம் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.