கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து விலை கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் அதன் ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதனைத் தொடர்ந்து மே மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த வானிலை மாற்றங்கள் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. அதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது.

திருவல்லிக்கேணி ஜாம்பஜார், சைதாப்பேட்டை, பெரம்பூர் போன்ற சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.55 முதல்ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ ரூ.120, அவரைக்காய் ரூ.70, பச்சை மிளகாய் ரூ.55,சின்ன வெங்காயம் ரூ.35, கேரட்,நூக்கல், முள்ளங்கி தலா ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.26, பீட்ரூட்ரூ.23, பாகற்காய், வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.20, கத்தரிக் காய், கருணைக் கிழங்கு தலா ரூ.15, முட்டைக்கோஸ், முருங்கைக்காய் தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி டியூசிஎஸ் சார்பில் இயங்கும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகிறது. வடசென்னை வியாசர்பாடி சந்தையில், 2-ம் ரக தக்காளி நேற்று கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. இது தொடர்பாக காய்கறி வியாபாரி வனரோஜா கூறும்போது, இன்று ஒரேநாளில் 15 கிலோ பெட்டி தக்காளியின் விலை ரூ.300 அதிகமாகியுள்ளது. அதனால் கிலோ ரூ.50-க்கு விற்கிறோம். விலை உயர்வால் வாங்க யாரும் வரவில்லை என்றார்.

தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாகதக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அனுப்பும் பகுதிகளான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில பகுதிகளான பலமனேரி, ஒட்டிபள்ளி, சிந்தாமணி போன்ற பகுதிகளில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தக்காளி வாங்க வியாபாரிகள் குவிவதால் கோயம்பேடு சந்தைக்கு சரக்குவரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் முழுவதும் தக்காளி விலை உயர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE