5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு!

By காமதேனு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி இரவு தொடங்கி 2 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய விடிய இந்த கனமழை தொடர்ந்ததால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணியில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையைத் தாண்டி தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் தொடங்கி, கடலில் சேரும் திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் வரையிலும் ஆற்றின் இருபுறமும் உள்ள நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. நெல்லை ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மேலும் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன.

இதனிடையே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE