வங்க கடலில் உருவானது ‘ரீமல்' புயல்: தமிழகத்தில் நாளை முதல் அதிகபட்ச வெப்பநிலை 

By KU BUREAU

சென்னை: வங்கக் கடலில் ‘ரீமல்' புயல் உருவானது. இது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும். மேலும் நாளை தொடங்கி 29-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று மாலை 5.30 மணி அளவில் ‘ரீமல்' புயலாக உருவாகியுள்ளது.

இது நேற்று மாலை நிலவரப்படி வங்கதேசத்தின் கேப்புபாராவிலிருந்து சுமார் 360 கிமீ தொலைவிலும், மேற்கு வங்கம்- சாகர் தீவிலிருந்து 350 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவு வங்க தேசம், கேப்புபாரா- மேற்குவங்கம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கக் கூடும். புயல்கரையை கடக்கும்போது தரைக்காற்று அதிகபட்சமாக மணிக்கு135 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27, 28, 29 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 10 செமீ, மாம்பழத்துறையாறில் 9 செமீ, அணைகெடங்கு, பாலமோர், தக்கலை, தேனி மாவட்டம் பெரியாறு ஆகிய இடங்களில் தலா 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், புத்தன் அணை, சுருளக்கோடு, நாகர்கோவில், பெருஞ்சாணி அணை, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்அதனை ஒட்டிய தென் தமிழககடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE