தொடரும் கனமழை... தென் மாவட்ட ரயில்கள் ரத்து! இறக்கிவிடப்பட்ட பயணிகள் தவிப்பு!

By காமதேனு

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் உட்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி தற்போது வரை மிக, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையேயான சாலைகளில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் கீரனூர் என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கனமழை மற்றும் ரயில் பாதைகளில் செல்லும் வெள்ளம் ஆகியவை காரணமாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது தவிர மேலும் நான்கு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் விரைவு ரயில், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதனால் நெல்லை, திருநெல்வேலி, திருச்செந்தூர் செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர். முதியவர்கள் இதனால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ரயில்வே நிர்வாகம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE