அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் தலைவர் ஜெயலலிதா: அண்ணாமலைக்கு ஜெயக்குமார், சசிகலா கண்டனம்

By KU BUREAU

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், ஜெயலலிதா அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் தலைவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக் குமார், சசிகலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

டி.ஜெயக்குமார்: சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் ஜெயலலிதா. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர். அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் நோக்கில், இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம்விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அனைத்து மதங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பதிலும், அவர்களின் நம்பிக்கைகளை மதித்துப் போற்றுவதிலும், எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.

சசிகலா: ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமை. அவர் சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து மதத்தினராலும் மதித்து போற்றப்படும் ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவர் ஜெயலலிதா. சாதி, மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்தார். தமிழகத்தை ஒரு அமைதிபூங்காவாக வைத்து இருந்த ஜெயலலிதாவை எந்தவித குறுகிய வட்டத்துக்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE