வக்பு வாரிய திருத்த சட்ட கருத்து கேட்பு கூட்டம்; இஸ்லாமியர்களை திமுக அரசு புறக்கணிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: வக்பு வாரிய திருத்தச் சட்டம்குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காமல் திமுக அரசு புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து பல்வேறு மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு பெற்று வருகிறது. அதன்படி சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தஉள்ளதாகவும், இக்கூட்டத்தைதமிழக சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் இருக்கும் சாதக பாதகங்கள் பற்றி இஸ்லாமியர்கள் தான்முழுமையாக உணர்ந்து சொல்லமுடியும். ஆனால் இக்கூட்டத்துக்கு இதுவரை, அத்திருத்தத்துக்கு ஆதரவான ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. குறிப்பாக, எஸ்டிபிஐ, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜமாத் இஸ்லாமிய இந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, மனிதநேய ஜனநாயகக் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு வழங்கப்படவில்லை.

வக்பு வாரிய புதிய திருத்தத்தின்படி தேர்வு முறையே மாற்றப்பட்டு இஸ்லாமியர் அல்லாதவரும் உறுப்பினராக நியமிக்கப்படுவார்கள். தலைவர், உறுப்பினர்களின் அதிகாரம், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், ஆளும் கட்சியினர் வக்பு வாரிய சொத்துக்களை எளிதில் அபகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் வக்பு வாரியத்துக்கு இஸ்லாமியப் பெரியவர்கள் சொத்துக்களை தானமாக வழங்கியதன் நோக்கமே சிதைந்துவிடும்.

பொதுவாக சட்டத்திருத்தம் என்றால் ஓரிரு திருத்தங்கள் மட்டுமே செய்யப்படும். ஆனால், அதன் அடிப்படையையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் மத்திய அரசு 40-க்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வர உத்தேசித்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இதை திரும்பப் பெற வேண்டும்.

பெரும்பாலான இஸ்லாமியர் நலன் காக்கும் அமைப்புகளை இந்தகருத்துக்கேட்பு கூட்டத்துக்கு அழைக்காமல் ஸ்டாலினின் திமுக அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE