சென்னை: ‘‘என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள், செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்’’ என்று துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையை 5-வது முறையாக மாற்றி அமைப்பதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, துணை முதல்வர் அறிவிப்பு வந்ததும், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதல்வருடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுகபொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இருந்தனர்.
» இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது
» ஹரியானா காங்கிரஸ் கூட்டங்களில் பாக். வாழ்க கோஷம் ஏன்? - ராகுலுக்கு அமித் ஷா கேள்வி
அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ‘‘முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பொறுப்பை அளித்துள்ளார். இதுபதவியல்ல; பொறுப்பு. இதை ஏற்று மக்களுக்காக உழைப்பேன். அனைத்து அமைச்சர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழிகாட்டுதலுடன் என்னுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன். விமர்சனங்களை வரவேற்கிறேன். என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள், செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்’’ என்றார்.
தலைவர்கள் வாழ்த்து: துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி,புதிய பொறுப்பில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என கூறியுள்ளார்.
திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மநீம தலைவர் கமல்ஹாசன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி,சிலம்பரசன், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்