இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் கைது

By KU BUREAU

ராமேசுவரம் / சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 17 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம், உதிர்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இரு விசைப் படகுகளில் இருந்த மீனவர்கள் செபஸ்டியான் (38), ராஜீவ் (35), விவேக் (35), இன்னாசி (36), சாமுவேல் (33), பிரிச்சோன் (31), பாஸ்கரன் (30), இருதய நிஜோ (26), மரியா ஸ்டெடின் (27), துரை (39), அருள் தினகரன் (23), சுரேஷ் (45), ஜீவன் ஃப்ரைஷர் (22), மார்க்மிலன் (37), மில்டன் (48), ரொனால்ட் (48), சேசுராஜா (45) ஆகியோரைக் கைதுசெய்து, மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீனவர் சங்கத்தினர் இதைக் கண்டித்து ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ளகடிதத்தில், "தமிழக மீனவர்களைஇலங்கை கடற்படையினர்தொடர்ந்து கைது செய்வது, மீனவர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்கவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE