கோவை: உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால், கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கரேனா நோய்தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன் தினமும் 35 அல்லது 36 விமானங்கள் இயக்கப்பட்டன. தவிர தினமும் 10 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தினர். தற்போது விமான சேவைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதால் தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கொங்கு குளோபல் போரம்(கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள கோவை விமான நிலையம் உள்ளது. கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்துக்கு தினசரி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஒரு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. கோவை - கோவா இடையே ஏற்கெனவே வழங்கப்பட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட செவை அக்டோபரில் மீண்டும் தொடங்கப்படுகிறது.
கோவையில் மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு கோவா சென்றடையும். மீண்டும் மாலை 5.25 மணிக்கு கோவாவில் இருந்து புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கோவை வந்தடையும். கோவை - அபுதாபி இடையே வழங்கப்பட்டு வரும் சேவை குளிர்கால அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை - சிங்கப்பூர் இடையே தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்படுகிறது.
விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் மாதத்தில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்கள் எண்ணிக்கை 30-ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் மூன்றாண்டுகளுக்கு பின் கோவை விமான நிலையத்தில் பழைய நிலை காண வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து டெல்லிக்கும், வெளிநாட்டு பிரிவில் இலங்கை மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை விமான நிலையம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவது சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.