செந்தில் பாலாஜி உள்பட 4 அமைச்சர்கள் பதவியேற்பு - யாருக்கு எந்தத் துறை?

By KU BUREAU

சென்னை: செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் தமிழக அமைச்சர்களாக ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியேற்றனர். அவர்களுக்கு ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஞாயிற்றுகிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்கள் பதவியேற்றவுடன் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பூங்கொத்து கொடுத்தனர்.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

துறைகள் ஒதுக்கீடு: அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே வகித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அமைச்சர் கோவி செழியனுக்கு உயர் கல்வித் துறை, ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை, ஆவடி நாசசுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அமைச்சரவை மாற்றத்தின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE