புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து விமான சேவை தொடங்கப்படவுள்ளது. கேரள மாநிலம் கொச்சிக்கு விமானம் இயக்க பரிசீலிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார்.
புதுச்சேரியில் உள்ள கேரள சமாஜம் சார்பில் குடும்ப சவுகிருத மேளா 2024 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுச்சேரி, கடலூர் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பேசியது: ''கேரளத்தில் பிறந்தாலும், தமிழகத்தில்தான் கல்விக்காலத்தை நிறைவு செய்தேன். அதன்பின் குஜராத்தில் பணியாற்றினேன். புதுச்சேரியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியிருந்து கேரளத்துக்கு விமான சேவை தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதன்படி புதுச்சேரியிலிருந்து கொச்சிக்கு விமான சேவை இயக்க பரிசீலிக்கப்படும்'' என்றார்.
நிகழ்ச்சியில் கேரள பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் மகளிரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாஹே பிராந்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ்பரம்பத், பாண்டிச்சேரி கேரளசமாஜம் தலைவர் ஜோஷி கே.சங்கர், செயலர் சிகேஷ், விழா ஒருங்கிணைப்பாளர் ஜூட்பெர்லின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் புதுச்சேரியில் வாழும் மலையாள சமூகத்தினர் பங்கேற்றனர்.
» குன்னூரில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்
» உலக இதய தினம்: கும்பகோணத்தில் 1000 பேருக்கு சிறுதானிய உணவு வழங்கல்