குன்னூரில் இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடைபெற்ற இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாமில் ஏராளமான நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 28ம் தேதி உலக ரேபீஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து செல்லப் பிராணிகளுக்கும் இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சத்தியநாராயணன் அறிவுறுத்தலின் பேரிலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் ரேபீஸ் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக குன்னூரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறையில் உதவி இயக்குநர் பார்த்தசாரதி, உதவியாளர்கள் தேவி, தீபா முகாமில் கலந்து கொண்ட நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிகளை இட்டனர். இதில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் கொண்டுவரப்பட்டு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE