மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாளை முதல் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில் டோக்கனை பெறுவதற்கு அதற்கான இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள், வருமானவரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் இல்லை என்றும், இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அந்தவகையில், நேற்று காலை முதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. சென்னையை பொறுத்தவரை, 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில், வடசென்னை பகுதியை பொறுத்தவரை, அதிகாலை 5 மணிக்கே வரிசையில் பொதுமக்கள் நிற்க ஆரம்பித்துவிட்டனர். சில பெரியவர்கள், அந்தந்த வீட்டின் சார்பாக வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
தெரு முழுக்க மக்கள் நின்ற நிலையில், அடுத்த தெரு வரையிலும் வரிசை சென்றது. விடிகாலையிலேயே மக்கள் காத்திருக்க துவங்கிவிட்டாலும், 8 மணிக்குதான் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்க துவங்கினர். ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சில ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அவர்களின் வரிசையை ஒழுங்குப்படுத்தியவாறு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர், பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததை அறிந்து கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இதுபோன்ற இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் டோக்கன் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யாருக்கு நிவாரணத்தொகை கிடைக்குமோ, அந்த பயனாளிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்றும், பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!
ஒரே நாளில் ரூ.192 கோடி வருமானம்: பத்திரப்பதிவுத்துறை தகவல்
கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவர் மீது வழக்குப்பதிவு
ஆம்னி பேருந்து- லாரி மோதி விபத்து: 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு! உயிர் தப்பிய பயணிகள்
சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!