சந்தானம் சப்போர்ட் - டு - சனாதன அக்கப்போர்!

By சானா

எடுக்கும் நடவடிக்கைகளால் எதிர்ப்புகளையும், எடுக்காத நடவடிக்கைகளால் விமர்சனங்களையும் எதிர்கொண்டு பங்கமாகியிருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பால்ய நண்பர் உதயநிதியைப் பார்த்துப் பேசி உற்சாகமடையலாம் என்று காரில் விரைந்து கொண்டிருந்தார்.

‘சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசுபடுத்தி சின்னாபின்னமாக்குறாங்களே. சனாதனம் பத்தி பாடப் புத்தகத்துல சப்ஜாடா சப்ஜெக்ட் வந்திருக்குன்னு நம்ம சப்போர்ட்டர்கள்கூட சொல்லாம விட்டுட்டாங்களே’ என்று சஞ்சலப்பட்டது மகேஸின் மனது.

திடீரென கார் நிறுத்தப்பட்டது. எட்டிப்பார்த்தால், கூகுள் மேப்பே குழம்பும் அளவுக்குக் கூட்ட நெரிசலில் சாலையே மனிதத் தலைகளால் நிரம்பியிருந்தது.

மலைத்துப்போன மகேஸ், “என்னப்பா இவ்ளோ கூட்டம்? ஏ.ஆர்.ரஹ்மான் இன்னொரு கான்செர்ட்டை ஆரம்பிச்சிட்டாரா?” என்று கேட்க, “இவங்கள்லாம் அடிக்கடி மின்வெட்டால அவஸ்தையாகி கடற்கரையில காத்து வாங்க காலாற நடந்துபோறவங்களாம் தலைவரே” என்றார் ஓட்டுநர். ‘செந்தில் பாலாஜி அண்ணன் சிறையில இருந்தாலும், அவரோட முன்னாள் துறை அதே சிறப்போட இயங்கிட்டு இருக்கு போல’ என்று நினைத்துக்கொண்டார் மகேஸ்.

ஆங்கே… “ஏதோ…. சந்தானம் கூட நடிச்சதால சினிமாவுல சமாளிச்சிட்டு இருந்தோம்… இப்ப சமூகவலைதளப் போராளிகளோட சப்போர்ட்டை வாங்கிடலாம்னு சனாதனத்தைப் பத்திப் பேசி, ‘இந்தியா’வுக்குள்ளேயே(!) எதிர்ப்பு உருவாகிற நிலைமை வந்துடுச்சே.

தமிழ்நாட்டுல அட்ரஸே இல்லாத ஆம் ஆத்மி கட்சியெல்லாம் டெல்லியில இருந்துக்கிட்டு, சின்ன தலைவர்னு என்னைச் சீண்டிப் பார்க்குதே. இனி ‘சின்னவர்’னு யாராச்சும் புகழ்ந்தால்கூட அந்த ஞாபகம்தானே வரும்” என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தார் (முன்னாள்) ‘மூன்றாம் கலைஞர்’ உதயநிதி.

அதே தருணத்தில் அன்பில் மகேஸ் உள்ளே நுழைய, “துக்கத்துக்குத் துணையா வந்து நிற்கிறே... நண்பேண்டா!” என்று அவரை ஆரத் தழுவினார் உதயநிதி.

“நீயும் நானும் நிம்மதியா சிரிச்சு எவ்வளவு நாளாச்சு” என்று ஆனந்தப்பட்டார் அன்பில்.

“மாட்டிக்காத மாதிரி தப்புப் பண்ற நண்பர்களா இருந்தோம்னு மகிழ்ச்சியா மேடையில பேசுனோம். இப்ப எதையாவது பேசப் போய் எக்குத்தப்பா மாட்டிக்கிறோம் இல்ல?” என்றார் உதயநிதி.

சளைக்காமல் ‘சம்மன்’கள் வந்துகொண்டே இருப்பதால் சமீபகாலமாகச் ‘சமநிலை’ பேணிவரும் சீமானையும்கூட விடாமல் துரத்தும் செய்தியாளர்கள், ‘சின்ன தலைவரை’ விட்டுவைப்பார்களா என்ன? பால்ய நண்பர்கள் பாசமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது ஊடகர்கள் ஊடாகப் புகுந்தனர்.

“சார்…‘கொசுவத்திச் சுருள்’ படத்தைப் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கீங்க… தமிழ்நாட்டுல் டெங்கு பரவல் ஜாஸ்தியாகுதுன்னு ஜாடையா சொல்றீங்களா?” என்று ஒரு செய்தியாளர் கேட்க,

“இப்பல்லாம் யார் பிரச்சினை பண்ணினாலும்… கூப்பிட்டுவச்சு பேச்சுவார்த்தை நடத்துறோம். அதுமாதிரி ஏடிஸ் கொசுக்கள்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தி எல்லையைத் தாண்டி வெளியேத்துற மாதிரி ஒரு ஏ.ஐ. டெக்னாலஜி கொசுவை உற்பத்தி பண்ற திட்டம் இருக்கு. பயப்படாதீங்க” என்றார் உதயநிதி.

“நாங்க பயப்படலை. ஆனா, அடுத்தடுத்த பிரச்சினைகளால ஆடிப்போயிருந்த பாஜககாரங்க, உங்க சனாதன சர்ச்சைக்கு அப்புறம் உற்சாகமாகிட்டாங்க தெரியும்ல?” என்று இன்னொரு செய்தியாளர் கேட்டதும்,

“சனாதனப் பிரச்சினையில சமாதானம், சமரசம்ங்கிற பேச்சே கிடையாது. இதைவிட்டுட்டு சிஏஜி அறிக்கை பத்திப் பேசுங்க” என்று உதயநிதி சொல்ல, “2ஜில இருந்து ஆரம்பிக்கலாமா சார்?” என்று ஒருவர் கேட்ட துணைக் கேள்வியால், பிரஸ் மீட் முடிவுக்கு வந்தது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE