ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில்பாலாஜியை தியாகி என்பது வெட்கக்கேடானது: பழனிசாமி விமர்சனம்

By KU BUREAU

சேலம்: ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில்பாலாஜியை தியாகி எனமுதல்வர் சொல்வது வெட்கக்கேடானது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால்தான் குற்றங்கள் முற்றிலும் குறையும். தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்காவிட்டால், இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து விடும்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவரை வருக, வருக என வரவேற்று, `உன் தியாகம் பெரிது'என்று கூறியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் கைதான செந்தில்பாலாஜியை தியாகி என முதல்வர் சொல்வது வெட்கக்கேடானது. செந்தில்பாலாஜியை அமைச்சராக்கினால், அதற்கு தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் தக்க பதில் அளிப்பர்.

செந்தில்பாலாஜி நிபந்தனையை மீறினால், தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? திமுகவை வளர்க்கப் போராடியவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை,பல கட்சிகளுக்கு சென்று வந்தவருக்குத்தான் தியாகி பட்டம்கொடுக்கிறார்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில்பாலாஜியை ஊழல்வாதி என்றார். இப்போது தியாகி என்கிறார். மூத்த அமைச்சர்கள் உள்ள நிலையில், வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு இவ்வளவு சலுகை கொடுப்பதும், வாழ்த்து சொல்வதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் 6 சதவீதம் சொத்துவரி உயர்வு என்பதுகண்டிக்கத்தக்கது. சொத்து வரிஉயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டீன்கள் நியமிக்கப்படாததால், மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் நிர்வாக சீர்கேடு நிலவுகிறது. ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த காவல் துறையைப் பாராட்டுகிறேன். திமுகவின் 40 மாத கால ஆட்சியில் நடந்த தவறுகளை மறைக்கவே, பவள விழாகொண்டாடப்படுவதாக கருதுகிறேன். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE