மத்திய அரசின் என்.சி.சி.எஃப் மூலம் சலுகை விலையில் வெங்காயம் - சென்னையில் 19 இடங்களில் விற்பனை

By KU BUREAU

சென்னை: மத்திய அரசின் என்சிசிஎஃப் மூலம்நடமாடும் வேன்களில், சென்னையில் 19 இடங்களில் சலுகை விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் சார்பில் ‘மொபைல் வேன்கள்’ எனப்படும் நடமாடும் ஊர்திகள் மூலமாக சில்லரை வணிகத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் கடந்த செப்.5 தேதி டெல்லி மற்றும்மும்பையில் தொடங்கப்பட்டது.

பின்னர் சென்னையில் 11ம் தேதியும், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர், குவஹாத்தி போன்ற முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுவதும் மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக பரபரப்பான சந்தைகள், குடியிருப்பு பகுதிகள், முக்கிய ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இந்த என்சிசிஎஃப் மொபைல் வேன்கள் நிறுத்தப்பட்டு, மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் மயிலாப்பூர் - லஸ் கார்னர், தேனாம்பேட்டை, போரூர், தாம்பரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஆலந்தூர் மெட்ரோ, தி.நகர், மெப்ஸ் சிக்னல், ஆழ்வார்பேட்டை, கிண்டி வட்டம், கீழ்ப்பாக்கம் மெட்ரோ, சென்ட்ரல் ரயில்நிலையம், அண்ணா நகர், கோயம்பேடு பேருந்து நிலையம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட 19 இடங்களில் மலிவுவிலையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வெங்காயம், வெங்காய உற்பத்திக்கு பெயர் பெற்ற மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE