எட்டயபுரம் அருகே நான்குவழிச்சாலையில் தொடரும் விபத்து: கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை ஆணையம்

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டுகொள்ளாததால் நான்குவழிச்சாலையில் குறுகிய பாலத்தால் விபத்துகள் தொடர்ந்து வருகிறது.

தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம், அருப்புக்கோட்டை, மதுரை வரையிலான மாநில நெடுஞ்சாலை கடந்த 2007-ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் மதுரை - தூத்துக்குடி மார்க்கத்தில் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் பாசன கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே இருந்த பழைய பாலத்தை விரிவாக்கம் செய்யாமல், பக்கவாட்டு சுவர் மட்டும் சீரமைக்கப்பட்டது. இதனால் நான்குவழிச்சாலை அகலத்துக்கு இந்த பாலம் இல்லாமல், குறுகலாக உள்ளது.

நான்குவழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுகலான பாலம் அருகே வரும் போது தான் தெரிவதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. இதுவரை ஏராளமான விபத்துகள் நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு வடமாவட்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த லாரி சிந்தலக்கரை அருகே உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் உட்பட யாருக்கும் எந்தவித காயமும் இல்லை. ஆனால், லாரியின் முன்பக்கம் சேதமடைந்துவிட்டது. தொடர விபத்துகளால் உயிர் சேதம் மட்டுமில்லாமல் பொருட்சேதமும் ஏற்படுகிறது எனவும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து விபத்துகள் நடந்து வந்தாலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். அதுவரை குறுகிய பாலம் தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE