காங்கிரஸ் கட்சியின் துடிப்பான செய்தித் தொடர்பாளாராக செயல்பட்டு வந்த கவுரவ் வல்லப், இன்று தனது ராஜினாமாவை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு அனுப்பியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் பாஜகவில் ஐக்கியமானார்.
தேசத்தின் பிரதான இரு தேசியக் கட்சிகளான பாஜக - காங்கிரஸ் இடையே, தேர்தல் நெருக்கத்தில் பரஸ்பரம் தாவல்கள் அதிகரித்துள்ளன. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கான தாவல்கள் அதிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது விலகலை இன்று அறிவித்த கவுரவ் வல்லப், அடுத்த தாவல் திலகமாக மாறியுள்ளார்.
“தற்போது காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் திசையில்லாத பாதை என்னை சங்கடப்படுத்துகிறது. சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை என்னால் ஆதரிக்கவும் முடியாது. நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை தினம்தினம் விமர்சிக்கவும் முடியாது. அதனால், காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்” என்று தொடங்கும் தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் தளத்தில் இன்று வல்லப் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கடிதம் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பாளர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. "நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என் இதயம் கனமாக இருக்கிறது. நான் வெளிப்படுத்தவும், எழுதவும், பகிர்ந்து கொள்ளவும் நிறைய இருக்கிறது. இருப்பினும், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் பேசுவதை எனது கொள்கை தடை செய்கிறது. ஆனபோதும் இன்று நான் எனது எண்ணங்களை முன்வைக்கிறேன். உண்மையை மறைப்பதும் ஒரு குற்றம் என்று நான் உறுதியாக நம்புவதால், அதில் ஈடுபட மறுக்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் அவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.
"இந்த நாட்களில் கட்சி தவறான பாதையில் செல்கிறது. ஒருபுறம், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறோம், மறுபுறம், கட்சி ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை எதிர்ப்பது போல் தெரிகிறது. இந்தபாணி அரசியல் தவறான செய்தியை அளிக்கிறது. கட்சி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே ஆதரிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது காங்கிரசின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது" என்றும் அந்த கடிதத்தில் வல்லப் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கான பாஜகவின் குற்றச்சாட்டுகளையே கவுரவ் வல்லப் எதிரொலித்துள்ளதால் விரைவில் அவர் பாஜகவுக்கு தாவுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அரசியலில் பெரிதாக சோபிக்காதவர் கவுரவ் வல்லப். ஆனால் அடிப்படையில் பேராசிரியரான அவரது எழுத்து மற்றும் பேச்சாற்றலால் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஈர்த்திருந்தார்.
சனாதன எதிர்ப்பு, பெரும்பான்மை மக்களான இந்துக்களுக்கு எதிரான போக்கு, அதானி - அம்பானி என தொழிலதிபர்களை எதிர்ப்பது, காங்கிரஸ் தனது ஆதார கொள்கைகளில் இருந்து விலகுவது என கட்சியின் பிரமுகராக இருந்தவரே அக்கட்சிக்கு எதிராக தேர்தல் நெருக்கத்தில் களமாடி இருப்பது இணையவெளியில் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!
சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!
வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!