தருமபுரி: தருமபுரி அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அருகே அரசு மதுபான கடை ஏதும் இல்லை. இதனால், கிராமத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள், கம்பைநல்லூர் சென்று மது அருந்துகின்றனர்.
இந்த கிராமத்தில் மதுப்பிரியர்கள் அதிகம் இருப்பதை அறிந்த உள்ளூர்வாசி ஒருவர், டாஸ்மாக் மதுக்கடையில் மொத்தமாக மது பாட்டில்களை கொள்முதல் செய்து, தனது வீட்டில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனாலும் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதையடுத்து, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் கம்பைநல்லூர் காவல் நிலையம் எதிரே அரூர்- காரிமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
» வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு நீர் திறப்பு
» சாத்தான்குளத்தில் குடிநீர் தட்டுப்பாடு - காலி குடங்களுடன் வீதிக்கு வந்த பெண்கள்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மக்கள், “போளையம்பள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதால், சிறுவர்களும் மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, சட்ட விரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்” என்றனர்.
இதனிடையே, மறியலில் ஈடுபட்ட மக்களிடம், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். மது விற்பனையை தடுக்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக, அரூர்- காரிமங்கலம் பிரதான சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.