சிறுபான்மையினர் பாதுகாப்பு, சலுகை, திட்டங்களில் தமிழகமே முதன்மை: ஆணையத் தலைவர் ஜோ.அருண் புகழாரம்

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: “சிறுபான்மையினர் பாதுகாப்பு, சலுகை, திட்டங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது” என ஆணையத் தலைவர் ஜோ.அருண் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.28) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண் தலைமை வகித்தார். ஆணைய உறுப்பினர் செயலர் வா.சம்பத், ஆட்சியர் மீ.தங்கவேல், கரூர் எம்.பி. செ.ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையத் தலைவர் ஜோ அருண் பேசியது: “சிறுபான்மை மக்களை சிறப்பாக வழி நடத்தும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மதம், மொழிவாரியான சிறுபான்மையினர்களின் நலன்களை பேணிக் காத்திடவும், அவர்கள் உரிமைகளை பாதுகாக்கிறது.

கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 151 பேருக்கு ரூ.7.82 லட்சத்தில் மிதிவண்டிகள். சிறுபான்மையினருக்கான மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரங்கள் 100 பேருக்கு ரூ.5.56 லட்சத்தில், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 295 பேருக்கு ரூ.1.89 லட்சம் உள்ளிட்ட எண்ணற்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து, 285 பேருக்கு ரூ.38.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண் வழங்கினார்.மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் பொன்.ராஜேந்திர பிரசாத், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், ஜே.முகமது ரஃபி, எஸ்.வசந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, பள்ளப்பட்டி நகராட்சித் தலைவர் முனவர்ஜான், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ, கிறித்துவ, இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் செய்தியாளர்களிடம் கூறியது: “சிறுபான்மை மக்களுக்கு ஆணையம் மேற்கொள்ளும் பணிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், திட்டங்கள், அதனால் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிக்க இருக்கிறோம். நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு, நலத்திட்டங்கள் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கலந்துரையாடல் நடத்தி சிறுபான்மையினரின் குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 120 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மூன்று, மூன்று மாவட்டங்களாக கூட்டம் நடத்தி சிறுபான்மையினர் பாதுகாப்பு, சலுகைகள், திட்டங்கள், அவர்களின் கோரிக்கைள் குறித்து கேட்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். கிறிஸ்தவர்கள் ஜெருசலம், முஸ்லிம்கள் மெக்கா செல்வதுப்போல புத்த மதத்தை சேர்ந்தவர்கள் நாக்பூர் தீட்ச பூமி சென்று திரும்பும் பயணத்திற்கும் அரசு உதவி செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE